கொரோனா வைரஸால் பிரபலமடைந்த யேல் பல்கலைக்கழக்கத்தின் பாடப்பிரிவு

லண்டன் : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது. இதனால் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வீடுகளில் உள்ளனர். அவர்களில் சிறு பகுதியினர் மட்டுமே வீட்டிலிருந்து வேலை பார்க்கின்றனர். பலர் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

தொலைக்காட்சியிலும், நெட்பிளிக்ஸ், பிரைமிலும் மட்டுமே எவ்வாறு சலிக்காமல் நேரம் செலவிட முடியும்? புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வது தான் சலிப்பை போக்கும் என உணர்ந்துள்ளனர். இந்த கடினமான காலங்களில், எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்பதனை தெரிந்துள்ள பலரும் யேல் பல்கலைக்கழகத்தின், 'நலவாழ்வுக்கான அறிவியல்' என்ற ஆன்லைன் பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

மார்ச் 26-ம் தேதி வரை இப்பாடத்தில் 13 லட்சம் பேர் இணைந்துள்ளனர். 2018-ல் இக்கல்வி தொடங்கியதிலிருந்து 2020 பிப்., வரை 5 லட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் கிடு கிடுவென உயர்ந்துவிட்டது. இதில் அதிகமானவர்கள் இணைந்த முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.


ஆன்லைனிலும், பல்கலை., வளாகத்திலும் இப்பாடத்தை கற்பிக்கும் பேராசிரியர், லாரி சாண்டோஸ் கூறுகையில், மாணவர்களிடம் இக்கல்வியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய போதே மிகவும் பிரபலமடைந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் இக்கட்டான சூழலை எதிர்கொள்ள அறிவியலை தேடி வருகின்றனர். அவர்களுக்கு கிடைத்திருக்கும் கூடுதல் நேரத்தினை இவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகின்றனர். யேலின் 300 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வகுப்பாக இது திகழ்கிறது. ஒட்டுமொத்த மாணவர் அமைப்பில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இக்கல்வியை தேர்ந்தெடுத்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அப்பாலும் இக்கல்விக்கு சந்தை இருப்பது தெரியவந்துள்ளது' என கூறினார்.